MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
முஃஜிஸாத், கராமத் (அற்புதம்)
முஃஜிஸாத் (நபிமார்கள் செய்யும் அற்புதம்)
♦ நபி ﷺ அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி ﷺ அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரி 3636
♦ மக்காவாசிகள் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி ﷺ அவர்கள் காட்டினார்கள்.
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரி 3637
♦ நபி ﷺ அவர்களின் தோழர்களில் இருவர் நபி ﷺ அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசி சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரி 3639
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், தங்களின் திருக்கரத்தை என் தலையின் மீது வைத்து, 'இந்தச் சிறுவர் ஒரு நூறாண்டு வாழுவார்' எனக் கூறினார்கள். அதன்படியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் புஷ்ரு (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்தார்கள். மேலும், அவர்களின் முகத்தில் ஒரு மரு இருந்தது. அந்த மரு போகும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். அதைப் போன்றே அந்த மரு போன பிறகுதான் அன்னார் மரணமடைந்தார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் புஷ்ரு (ரழியல்லாஹு அன்ஹு)
தப்ரானி, பஸ்ஸார்
♦ நான் ஸலாமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம்பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள்.
யஜீது பின் அப்திர் ரஹ்மான் (ரழியல்லாஹு அன்ஹு)
அபூதாவூத்
♦ ஹழ்ரத் கதாதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது) அவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது
தப்ரானி, பைஹகி
♦ மேலும் தப்ரானி, இப்னு ஷாஹீன் ஆகியோர் அறிவிக்கிறார்கள். ஹழ்ரத் கதாதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கண்ணில் உஹதுப் போரில் காயம் ஏற்பட்டது. அந்தக் கண் துண்டித்து அவர்களின் கன்னத்தில் விழுந்தது. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அக்கண்ணை அதே இடத்தில் திரும்பப் பொருத்தினார்கள். அக்கண், அவரின் மற்றொரு கண்ணை விட மிகத் தெளிவாகத் தெரிந்தது!
ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரழியல்லாஹு அன்ஹு)
அல் இஸாபா
♦ பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்தாள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, 'எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?' என்று கேட்டார். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, 'தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டார். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி, அப்பெண்ணிடம் கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது.
தப்ரானி
♦கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண் வலியிலிருந்து குணமடைந்தார்கள்.
புகாரி, முஸ்லிம்
♦'நான் (மக்காவில்) உக்பா பின் அபீ முஅய்த் என்பவரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களும், அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் என்னிடம் வந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், 'சிறுவரே! பால் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் உள்ளது. எனினும் நான் நம்பி ஒப்படைக்கப்பட்டவனாக இருக்கிறேன். (யாருக்கும் நான் இவ்வாடுகளின் பாலை என் விருப்பப்படி வழங்க முடியாது)' என்றேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், 'சினையாகாத சாதாரண ஆடு எதுவும் உள்ளதா?' என்று கேட்டார்கள். உடனே ஒரு ஆட்டை நான் அன்னவர்களிடத்தில் கொண்டு வந்தேன். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அந்த ஆட்டின் மடியை தங்கள் திருக்கரத்தால் தடவினார்கள். உடனே (அதிலிருந்து) பால் வர ஆரம்பித்துவிட்டது! ஒரு பாத்திரத்தில் பாலைக் கறந்து அவர்கள் பருகினார்கள். அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் வழங்கினார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு)
முஸ்னத் அஹ்மத்
♦ அப்துல்லாஹிப்னு அம்ரிப்னி ஹராம் இறந்துவிட்டார். அவர் கடன்பட்டிருந்தார். அவர் கொடுக்க வேண்டிய கடனில் சிறிதை தள்ளுபடி செய்வதற்காக அவருக்கு கடன் கொடுத்தவர்களிடம் உதவி தேடினேன். அவர்களிடத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சிபாரிசு செய்தார்கள். அவர்கள் இணங்கவில்லை. அப்பொழுது, நீர் சென்று உம்முடைய பேரீத்தம் பழங்களை (இனவாரியாகத்) தனித்தனியே பிரித்து அஜ்வாவைத் தனியாகவும், அத்க்கஜைதைத் தனியாகவும் பிரித்து வைத்துக் கொண்டு, பின்னர் எனக்குத் தகவல் சொல்ல ஆள்) அனுப்பு' என்று என்னிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். நான் (அவ்விதமே) செய்து விட்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு (ஆள்) அனுப்பினேன். (அவர்கள் அங்கு வந்து) அதன் மீதோ அல்லது அதன் மத்தியிலோ அமர்ந்து கொண்டு, '(கடன் கொடுத்த) அவர்களுக்குச் சேரவேண்டிய அவ்கியாக்கள் அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டேன். என்னுடைய பழங்களில் எதுவும் குறையாமல் எஞ்சியிருந்தது.
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரி
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களை நான் பார்த்தேன். அஸருடைய தொழுகையின் நேரம் வந்தது. (ஒழுச் செய்யத்) தண்ணீரை மக்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. ஒலுச் செய்ய ஒரு பாத்திரம் (தண்ணீர்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பாத்திரத்தில் தங்கள் கையை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒழுச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்களுடைய விரல்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வெளிவருவதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் ஒழுச் செய்தனர்.
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரி
♦ ஹூதைபிய்யா நாள் அன்று மக்களுக்கு தாகம் எற்பட்டு விடவே அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு முன்னால் தண்ணீர்ப்பை வைக்கப்பட்டிருந்தது. 'நாங்கள் ஒழு செய்யவோ குடிக்கவோ எங்களிடம் தண்ணீர் இல்லை. தங்களுடைய தண்ணீர்ப் பையில் இருப்பதைத் தவிர' என்று தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தண்ணீர்ப் பையில் தங்களின் கையை வைத்தனர். உடனே அவர்களுடைய விரல்களிலிருந்து தண்ணீர் பீரிட்டு வரத் தொடங்கியது ஊற்றுக் கண் (திறந்தாற்) போல! எனவே நாங்களும் ஒழுவும் செய்து குடிக்கவும் செய்தோம். 'அச்சயமயம் நீங்கள் எத்தனைப் பேர் இருந்தீர்கள்?' என்று ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு) அவர்கள், 'நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருப்பினும் அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்கள்தாம் இருந்தோம்' என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரீ, முஸ்லிம்
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களுக்காக ஒரு ஆடு வாங்குமாறு உர்வத்துல் பாரிக்கீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு தீனாரை (தங்க நாணயத்தை) கொடுத்தார்கள். அவர்கள் இரண்டு ஆடுகளை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் ஒரு ஆட்டை, ஒரு தீனாருக்கு விற்பனை செய்து விட்டு, ஒரு ஆட்டையும் ஒரு தீனாரையும் கொண்டு வந்தார்கள். இப்பொழுது, அவருடைய வியாபாரத்தில் விருத்தியைக் கோரி (இறைவனிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள்) பிரார்த்தித்தார்கள். (இதன் பலனாக) அவர்கள் மண்ணை விலைக்கு வாங்கினாலும், அதில் அவர்கள் இலாபம் அடைவார்கள்.
உர்வத்துல் பாரிக்கீ (ரழியல்லாஹு அன்ஹு)
புகாரி
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்னை யமன் நாட்டிற்கு நீதிபதியாக அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது நான், 'யா ரஸூலல்லாஹ்! என்னை தாங்கள் யமன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறீர்கள். நானோ வாலிபனாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கச் செல்கிறேன். (எனினும் எனக்கு அனுபவம் இல்லை) தீர்ப்பு எவ்வாறு என்பதை நான் அறியமாட்டேன்' எனக் கூறினேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் திருக்கரத்தால் என் நெஞ்சில் அடித்து, 'அல்லாஹூம்மஹ்தி கல்பஹூ வஸப்பித் லிஸானஹூ (யா அல்லாஹ்! இவரின் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! இவரின் நாவை உறுதிப்படுத்துவாயாக!) என்று துஆச் செய்தார்கள். வித்துகளை பிளந்து அதனை முளைக்கச் செய்கின்ற அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு பிறகு தீர்ப்பளிக்கின்ற விஷயத்தில் நான் ஒருபொழுதும் சந்தேகம் அடைந்ததில்லை.
ஹழ்ரத் அலீ (ரழியல்லாஹு அன்ஹு)
பைஹகி, ஹாகிம், முஸ்னத்
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சுமை சுமக்கும் ஒரு தோழருக்கு துஆச் செய்தார்கள். 'தோழரே! நீர் சுமப்பீராக! நிச்சயமாக நீர் கப்பலாக உள்ளீர்' என அவரிடம் கூறினார்கள். அந்தத் தோழர் கூறுகிறார், நான் அதற்கு பிறகு ஒரு ஒட்டகை அல்லது இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஒட்டகைகளின் சுமைகளை சுமந்தாலும் அது எனக்குக் கனமாக இருக்கவில்லை!
முஸ்னது அஹ்மத்
♦இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸஹ்பா என்னுமிடத்தில் ழுஹரைத் தொழுதுவிட்டு அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது இறைத்தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அஸ்ர் தொழுதுகொண்டிருந்தார்கள். (தொழுகையை நிறைவேற்றிய பின்) அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மடிமீது தலை வைத்து உறங்கினார்கள். அவர்களை அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுப்பிவிடவில்லை. சூரியனும் மறைந்து விட்டது. பிறகு (எழுந்து ) கூறினார்கள்:
இறைவனே! நிச்சயமாக உன் அடியார் அலி இறைத்தூதருக்கு பணியாற்றுவதில் அகப்பட்டுக் கொண்டார். ஆகவே, அவருக்காக சூரியனை திருப்பியனுப்பு! (மறைந்த) சூரியன் திரும்பி வந்து மலைகளுக்கு மேலாக உயர்ந்தது. அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து உளூ செய்து விட்டு அஸ்ரைத் தொழுதார்கள். பின்பு சூரியன் மறைந்து விட்டது. ஸஹ்பா எனுமிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அஸ்மா பின்த் உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா
தப்ரானீ (கபீர்) 19861, இப்னு அஸாகிர் 17369, ஷவ்கானீ (ஃபவாயித் மஜ்மூஆ) 1088
கராமத் (வலிமார்கள் செய்யும் அற்புதம்)
♣ மரணத்தருவாயிலிருந்த அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “ஆயிஷாவே! நான் விட்டு செல்கின்ற வராஃதத் சொத்துகளை நீயும் உனது இரு சகோதரர்களும் மற்றும் இரு சகோதரிகளும் இறைவன் குர்ஆனில் கூறியபடி பங்கு பிரித்துக் கொள்ளுங்கள்.
நான் கேட்டேன்: “எனது அருமை தந்தையார் அவர்களே! இரு சகோதரிகள் என்றீர்களே! அஸ்மா என்ற ஒரு சகோதரி தானே எனக்கு உள்ளார். இன்னொரு சகோதரி யார்? (ஆயிஷாவே!) எனது மனைவியார் பின்து காரிஜா கர்ப்பமாக உள்ளார். அவர் பெண் குழந்தையை ஈன்றெடுப்பார். (எனவே தான் உனக்கு இரு சகோதரிகள் என்றேன்).
அவர்கள் கூறியது போன்று பின்து காரிஜா அவர்கள் உம்மு குல்தூம் என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
முஅத்தா எண் 1242, பைஹகீ எண் 12267
♣ திண்ணமாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘யா சாரியா! அல் ஜபல்!’ (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்) என சப்தமிட்டார்கள்.
பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது ‘யா சாரியா அல் ஜபல்’ என்று சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கி கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.
ஹழ்ரத் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் – பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) – 2655