MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - வலிமார்கள் வரலாறு - அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு

அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு


பிறப்பு

எமது ஆத்மீக ஞான ஆசிரியர். ஆலிமே ஷரீஅத், இமாமே தரீகத், குத்புல் அக்பர், உஸ்தாதுல் ஆரிபீன், அல் கவ்ஸுல் அஸ்ஹர், ஷாதுலி தரீக்காவின் ஸ்தாபகர் இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆபிரிக்கா கண்டத்தில் ஸியுட்டா என்னும் நகருக்கு (மொரோக்கோவுக்கு வடக்கில்) அண்மையிலுள்ள கிமாரா என்னும் கிராமத்தில் ஹிஜ்ரி 593 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறந்தார்கள்.





பிறப்பின் சிறப்பு

இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) தாயாரின் பெயர் பாத்திமா என்பதாகும். ஷாதுலி நாயகத்தின் தந்தை நற்குணமும், நல் வணக்கமும், பொறுமை உடையவராகவும் இருந்தார்கள். தாயார் சிறந்த பயபக்தி உடையவராகவும் விளங்கினார்கள்.


இமாம் ஷாதுலி நாயகம் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருப்பேரர் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.



கல்வி

ஷாதுலி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இளம் வயதிலேயே தம் ஊர் மத்ரஸாவில் குர்ஆன் முழுவதையும் ஓதி மனனம் செய்து அதன் பின் கல்வி தேடி துனிஸ் நகரம் சென்றார்கள். அங்குள்ள மார்க்க கல்லூரியில் சேர்ந்து நஹ்வு, ஸர்ஃபு, லுகத், மஆனி, மஃகூல், மன்கூல், ஹிக்மத், ஆதாப், ஹதீது, தஃப்ஸீர், ஃபிக்ஹு, உசூல், ஃபராயிளு முதலான கல்விகளை கற்றார்கள். அப்போது அவர்களை மிகவும் கவர்ந்த நூற்கள் அறிவுலக மாமேதை “ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” எமது ஆத்மீக ஞான ஆசிரியர் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதிய உலக புகழ் பெற்ற இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலும் அபூ தாலீப் மக்கி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதிய ‘கூத்துல் குலூப்’ என்ற இரு நூற்களாகும். அந்த இரு கிதாபுகளையும் அவர்கள் திரும்ப திரும்ப படித்தார்கள். இவற்றின் கருத்து அவர்களின் இரத்தத்தோடு இரத்தமாக கலந்து அவர்களின் வாழ்வையே மாற்றி அமைத்தது. இவற்றை படித்தது முதல் இறை ஞான ரகசியங்களை அறிய பெரிதும் ஆசைப்பட்ட அவர்கள் துனிஸ் நகரத்திலிருந்து ஃபாஸ் என்னும் நகரம் வந்து அங்கு அலி இப்னு ஹிர்ஜிம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் முஹம்மது இப்னு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் நேரில் சந்தித்து உரையாடினார்கள். அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்தார்கள். பின்னர் மக்கா சென்று ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றினார்கள். அதன் பின் தனக்கு ஒரு காமிலான ஷைக்கை ஈராக் நாட்டில் தேடி திரிந்தார்கள். அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது ‘அலம்’ என்னும் மலையில் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஸ் என்னும் பெயருள்ள ஒரு இறை நேசர் இருக்கிறார் அவரை போய் காணும்! என்று உள் உணர்வு மூலம் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்தான். அதன் பின் அவர்கள் ‘அலம்’ மலை நோக்கிச் சென்றார்கள். மலை அடிவாரத்தை அடைந்ததும். அங்கிருந்த ஓடையில் குளித்து தூய்மையாகிக் கொண்டார்கள். பின்னர் மலை மீது ஏறி மலை உச்சியில் தவ வாழ்வு வாழ்ந்து வந்த அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை சந்தித்து ஸலாம் சொன்னார்கள். பதில் ஸலாம் சொன்ன அவர்கள் எழுந்து நின்று மர்ஹபா, மர்ஹபா என்று கூறி வரவேற்று உம் வரவு நல் வரவாகுக! நீர் அறிவு, வணக்கம் ஆகியவற்றால் ஏற்படும் பெருமைகளையெல்லாம் அழித்து ‘பக்கீர்’ (ஏழ்மை) நிலையில் எம்மிடம் வந்தீர். அதன் காரணமாக இம்மை, மறுமையுடைய நற் பாக்கியங்களை எல்லாம் பெற்றுக்கொண்டீர்.’ என்று நன்மாராயம் கூறினார்கள்.



துறவு

இமாம் ஷாதுலி நாயகம் அவர்கள் தன் ஆன்மீக மாணவர் அப்துல்லாஹ் இப்னு ஸலாமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் ‘ஜபல் ஜப்ரான்’ சென்று இலை, தழைகளை கொண்டு நோன்பு திறந்து கடும் தவம் செய்து வந்தார்கள். அப்போது ஒரு நாள் அவர்கள் அம்மலை மீது இருந்து ‘சூரத்துல் அன்ஹாமை’ ஓதும் பொழுது “வ இந்தகுதில் குள்ள அதுளின்... யக்ஃபுரூன்” என்ற திரு வசனம் வந்ததும் அதனை திரும்ப திரும்ப ஓதினார்கள். அவர்கள் அதனை அசைந்து அசைந்து ஓதும் பொழுது, அந்த மலையும் அவர்களுடன் சேர்ந்து அசைந்தது. நிறுத்தினால் அந்த மலையும் அசையாது நின்றது. இவ்வாறு அங்கிருந்து தவம் செய்து ஒரு வருடம் கழிந்த பிறகு ‘துனிஸ்’ நகரம் நோக்கி புறப்பட்டார்கள். அதன் பிறகு அங்கிருந்து மக்கா சென்று ஹஜ்ஜு செய்து விட்டு மதீனா சென்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ரவ்ளாவிற்கு முன் நின்று ஸலவாத்தும், ஸலாமும் சொன்னார்கள். அப்போது நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களின் கலிமா விரலை வெளியே நீட்டி சைக்கினை செய்து பதில் ஸலாம் சொன்னார்கள்.



ஷாதுலி தரீக்காவின் உருவாக்கம்

ஷாதுலி நாயகம் அவர்கள் தங்கள் தரீக்காவை இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையிலேயே அமைத்தார்கள். தம் தரீக்காவை பற்றி அவர்கள் கூறும் பொழுது “நம்முடைய தரீக்கா திருமணம் முடிப்பதை விட்டொழிப்பதோ, உமி நீக்கப்படாத கோதுமை ரொட்டியை உண்பதையோ, குருணை கஞ்சியை குடிப்பதையோ அடிப்படையாக கொண்டதல்ல. நம்முடைய தரீக்கா இறைவனுடைய ஏவலை பொறுமையுடன் மேற்கொள்வதும், நேர் வழியில் செல்வதுமாக இருக்கும். எனவேதான் ஷாதுலி நாயகம் அவர்கள் தம் முரீதுகளை நோக்கி நல்ல உணவுகளை உண்ணுங்கள். மதுரமான பானங்களை அருந்துங்கள். மென்மையான விரிப்பில் அமருங்கள். உயரிய உடையை உடுத்துங்கள். குளிர்ந்த நீரை குடியுங்கள். இவ்வாறு நீங்கள் செய்து “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி இறைவனுக்கு நன்றி சொன்னால் உங்களின் ஏனைய உறுப்புகள் எல்லாம் நன்றி செலுத்தும். ஷாதுலி நாயகத்தின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் ஷாதுலியா தரீக்கா உருவாக்கப்பட்டது. நாளொன்றுக்கு ஷாதுலி தரீக்காவில் ஆயிரம் தடவை அல்லாஹ் என்ற திக்ரும், 100 தடவை இஸ்திக்பாரும், 100 தடவை ஸலவாத்தும் சொல்லுமாறும் பணிக்கப்பட்டுள்ளது. எளிதான முறையில் இந்த தரீக்கா அமைக்கப்பட்டதன் காரணமாக மக்கள் கூட்டம் திரண்டு வந்து ஷாதுலி நாயகத்திடம் பைஅத் பெற்று முரீத் ஆனார்கள். “எவ்வாறு ஆமை கடலோரத்தில் முட்டையிட்டு அதனை தன் கண்களால் பார்த்து குஞ்சி பொறிக்கச் செய்து வளர்க்குமோ, அதேபோல் நானும் என் முரீதுகளை என் பார்வையால் பரிபாலித்து வளர்ப்பேன்” என்று இமாம் ஷாதுலி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள். ஹழரா, திக்ரு, ஸலவாத் அவ்ராதுகள் ஓதுவதற்காக உருவாக்கப்பட்ட இடங்களை தான் “ஸாவியா” என்று அழைக்கப்படுகிறது.



மறைவு

இமாம் ஷாதுலி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்த பொழுது எல்லோரையும் போக சொல்லிவிட்டு அபுல் அப்பாஸுல் முர்ஸீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை மட்டும் தனியே அழைத்து அவர்களிடம் பல்வேறு செய்திகளை பேசி அவர்களுக்காக இறைவனிடம் துஆ செய்து பின்பு தங்கள் மாணவர்களை அழைத்து “நான் வபாத்தான பின் நீங்கள் அபுல் அப்பாஸை பற்றி பிடித்து கொள்ளுங்கள். அவரே என்னுடைய கலீபாவாக இருப்பார். வருங்காலத்தில் அவர் பெரிதும் சிறப்புற்று விளங்குவார்கள். இறைவனிடம் செல்லும் வாயிலாக இருப்பார்” என்று கூறினார்கள். அன்று இரவு முழுதும் அவர்கள் படுத்திருந்த அறையிலிருந்து “இலாஹி, இலாஹி” என்ற திக்ரின் சப்தம் வந்துக்கொண்டிருந்தது. பின்னர் ஸஹ்ரு நேரத்தில் அந்த சப்தம் நின்றது. மாணவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஷாதுலி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வபாத்தாகி இருந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். இது நிகழ்ந்தது. ஹிஜ்ரி 656 ஷவ்வால் மாதம் 10 ஆம் நாள். அப்போது அவர்களுக்கு வயது 63.