MAIL OF ISLAM

Knowledge & Wisdom



M.M. அப்துல் ரஹ்மானின்


விளக்கை தேடும் விட்டில் பூச்சி


சுடர் விட்டு இருள் கொல்லும் ​சூரியனை கண்டேன்

இது என் நாயகத்தின் திருவதன பிரகாசம் என்றேன்


பதினைந்தாம் நாள் இரவின் வான்மதியை கண்டேன்

இது என் நாயகத்தின் மாசில்லாத மதிமுகம் என்றேன்


பளிங்கு போல் ஒளி தரும் விண்மீன்களை கண்டேன்

இது என் நாயகத்தின் ஒளி விசும் விழிகள் என்றேன்


காலை பனியில் குளித்த ரோஜா இதழ்களை கண்டேன்

இது என் நாயகத்தின் தேன் சொட்டும் செவ்விதழ்கள் என்றேன்


வெடித்த இலவில் வெளியேறிய மெல்லிய பஞ்சினை கண்டேன்

இது என் நாயகத்தின் அள்ளி வழங்கும் அற்புத கையின் பிஞ்சு விரல்கள் என்றேன்


இன்ப மணம் வீசும் இயற்கையின் கஸ்தூரியை கண்டேன்

இது என் நாயகத்தின் பொன்னுடல் வீசும் வியர்வை மணம் என்றேன்


நினைக்கும்போதே நாவு சுரக்கும் தேன் அமிர்தத்தை கண்டேன்

இது என் நாயகத்தின் சுகந்த வாய் சுரக்கும் இனிய எச்சில் துளிகள் என்றேன்


கடிக்கும்போது இனிமை தரும் சுவைமிகு கற்கண்டினை கண்டேன்

இது என் நாயகத்தின் நறுமண நாவு பேசும் அழகிய வார்த்தைகள் என்றேன்


எவைகளை கொண்டு நான் என் நாயகத்தை புகழ்ந்தேனோ

அவையெல்லாம் என்னை சினம் கொண்டு பார்த்தன


அறிவில்லாத அப்துல் ரஹ்மானே

யாரிடம் இரவல் வாங்கி நாங்களெல்லாம் சிறப்பு பெற்றோமோ,

அந்த மாபெரும் அருட்கொடையை எங்களின் சாதாரண சிறப்பை கொண்டா உவமிக்கிறாய்


கடல் நீரில் இருந்து ஒருதுளி நீர் எடுத்து

அற்பமான அந்த ஒரு துளி நீரை கொண்டு

மாபெரும் கடலுக்கே நீ வரையறை செய்கிறாயா என்று என்னிடம் சீறி பாய்ந்தன


உடனே என் எழுதுகோலை மூடி விட்டேன்

என் நாயகத்தை புகழ நான் ஆயிரம் ஜென்மம்

பிறவி எடுத்துவந்தாலும் அது என்னால் முடியாது என்று கூறியவனாக


அற்பமான விட்டில் பூச்சி நான்....

பேரொளி கொடுக்கும் என் நாயகத்தின் சுடரொளியில் நான் கரிந்து போகிறேன். இதுவே எனக்கு போதும்

M.M. அப்துல் ரஹ்மானின்


வசந்தகால கண்ணீர்த்துளிகள்


கோடான கோடி மனிதர்களில் என்னை நேசித்த யா ரசூலுல்லாஹ்...


அற்ப உலகம் இந்த பாவியை உங்களை விட்டும் பாரமுகமாக்கியதும் ஏனோ


வசந்த காலத்தில் கண்ணீர் சிந்தும் விழிகளோடு உங்களை புகழ்ந்த என் நாவு, இன்று தாங்க முடியா வேதனை தரும் உள்ளத்தோடு யா ரசூலுல்லாஹ் யா ரசூலுல்லாஹ் என்று கூறி அழுகிறது


வசந்த காலத்தில் உங்கள் கருணையினால் அமுத மழையில் நனைந்த நான், இன்றோ தாங்க முடியா வேதனைகளோடு கண்ணீர் மழையில் நனைகிறேன்.


கவலைகள் என்னும் தலையணையில் படுத்து இரவுப்பகலாக நான் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறேன்

நான் சிந்திய கண்ணீர் துளிகளில் எதாவது ஒரு துளி உங்கள் பாதம் நனைத்து என் தேவையை உங்களிடம் சொல்லாதா...


பாவங்கள் என்னும் மேகங்கள் என்னை சூழ்ந்து கொண்டபோது

கருமை கொண்ட என் உள்ளம், உங்களை மட்டும், உங்கள் அன்பை மட்டும் நம்பி வாழ்ந்தது.


எந்த நன்மைகளும் இன்றி அனாதையாக என் ஆத்மா கலங்கியபோது

என்னை என் நேசர் கரம் பிடித்து காப்பாற்றுவார் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டது


உயர இருந்து தாழ்வாக பாயும் அருவி போல் என் மீது சோதனைகள் வந்த வண்ணம் உள்ளன.

பக்தி மார்க்கத்திலே பரம கோழையான நான் தாங்க முடியாமல் தடுமாறி விழுகிறேன்


கரம் பிடித்து என்னை தூக்கி விடுங்கள் என் நாயகமே


எஜமானிடம் உணவு தேடி நிற்கும் நாய், அவர் வீட்டு வாசலில் காத்து நிற்பதை போல்

என் எஜமானரே, உங்களின் நாயாகிய நான் உங்கள் அன்புக்காக காத்து நிற்கிறேன்.


என்னை விட்டும் உங்கள் அழகு திருமுகத்தை திருப்பி விடாதீர்கள் என் நாயகமே.


உங்களை அன்றி என்னை சேர்த்து அணைப்பார் எனக்கு வேறு யாருமில்லை.


உங்களை தவிர இந்த உலகத்தில் எனக்கு எதுவுமே தெரியாது...

எனக்கு எல்லாமே நீங்கள்தான்.

M.M. அப்துல் ரஹ்மானின்


அன்னை பாத்திமா


​​வாசம் வீசும் நபிக்குடும்ப​​ம்

​​என்னும் பூஞ்சோலையின்

​என்றும் வாடாத வண்ண ரோஜா மலரே


​எங்கள் உயிரான அன்னையே,

​எத்தனை கோடி பெண்கள் இந்த அவனியில்

​​அவதரித்தாலும் பாத்திமா என்ற

பேரொளியில் எல்லாம் மறைந்து விடும்


​​காரணம் அது பேரொளிக்கெல்லாம்

​​​பேரொளி எங்கள் நாயகத்தின் ஒரு

​​பகுதியல்லவா...


​நாளை மறுமையில் என் தாயும் என்

​​சகோதரிகளும் இன்னும் உங்களை இந்த

​​பாரினில் நேசித்த எல்லா முஹ்மினான

​​பெண்களும் உங்கள் பாதத்தில் வீற்றிருக்கும்

​​பாக்கியத்தை தாருங்கள் அன்னையே...