MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஆன்மீக குரு
எகிப்தில் கெய்ரோவை சேர்ந்த ஒருவர் தமக்கு ஓர் ஆன்மீகக் குருவைத் தேடி ஊர் ஊராக அலைந்து திரிந்தார். இறுதியில் மனம் சோர்வடைந்த நிலையில் அவர் ஓர் பள்ளி வாயிலுக்குள் சென்றார்.
அங்கே ஒருவர் தொழுகைக்காக 'உளூ' ச் செய்துக்கொண்டிருந்தார். அவரது 'உளூ' வில் தவறுகள் தென்பட்டன. அது கண்ட ஆன்மீக குருவைத் தேடி வந்த மனிதர். 'இத்தகையோரும் இந்நாட்டில் இருக்கின்றனரே?' என்று அவரைப்பற்றி சற்று ஏளனமாக எண்ணினார். அப்பொழுது உளூச் செய்து கொண்டிருந்தவர், அவரை நோக்கி, "நீர் தேடி வந்த குரு உமக்குக் கிடைக்கமாட்டார்" என்று கூறினார். அதுகேட்ட அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அப்பெரியாரின் மாண்பினை அறியாமல் இவ்வாறு எண்ணி விட்டோமே என்று மிகவும் வருந்திய அவர், அவர்களை அணுகி, தமக்கு பைஅத் (தீட்சை) வழங்குமாறு வேண்ட அதற்கவர்கள், "நீர் உம்முடைய ஊருக்குத் திரும்பிச் சென்று நீர் எழுதிய நூல்களையெல்லாம் அடக்க விலைக்கு விற்றுவிட்டு வாரும்" என்று கூறினார்கள். அவ்வாறே, மறுபேச்சின்றி அவர் தாம் எழுதிய நூல்களனைத்தையும் விற்று விட்டு வந்த பொழுது, அவர்கள் அவரை நோக்கி, "நீர் அதிலுள்ள செய்திகள் அனைத்தையும் மறந்து விட்டு வாரும்" என்று கூறினார்கள்.
அவரும், தாம் எழுதிய நூல்களிலிருந்த அனைத்துச் செய்திகளையும் மறந்து மனதில் யாதொன்றும் இல்லாத நிலையில் அந்த ஞானாசிரியரான பெரியாரிடம் வந்து சேர்ந்தார். அதன் பின்னரே அவர்கள் அவருக்கு இறை ஞான இரகசியங்களை போதித்தார்கள்.
ஞானம் பயின்ற அம்மாணவர் யார் தெரியுமா? அவர்தாம் அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மிகப்பெரும் மார்க்க மேதையும், சிறந்த சூபியுமாவார்கள். அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்கள்.